Tuesday, January 29, 2008

417. கடவுளும் காலணியும்

டிசம்பரின் ஒரு மாலைப் பொழுதில், ஒரு பத்து வயதுச் சிறுவன்,  செருப்பறியா பாதங்கள் கடுங்குளிரில் நடுங்க, ஒரு காலணிக் கடையை கண்ணாடி சன்னல் வழியாக வெறித்துப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.  அவ்வழியே வந்த நடுத்தர வயது பெண்ணொருத்தி அச்சிறுவனிடம், "என்ன, ஏதோ பலமான யோசனையில் உள்ளது போல் தெரிகிறதே!" என்றவுடன், அவன், "எனக்கு ஒரு ஜோடிக் காலணிகளை வாங்கித் தருமாறு கடவுளிடம் கேட்டுக் கொண்டிருந்தேன்!" என்று கூறினான்.

சிறுவனின் கையைப் பிடித்து, அக்காலணிக் கடைக்குள் அழைத்துச் சென்ற அப்பெண், கடைக்காரரிடம் அச்சிறுவனுக்கு டஜன் காலுறைகள் எடுத்து வருமாறு கூறியதோடு, ஒரு பாத்திரத்தில் தண்ணீரும், டவலும் தரும்படி கேட்டுக் கொண்டார்.  தனது கையுறைகளை நீக்கி விட்டு, குனிந்து சிறுவனின் சிறிய பாதங்களை தண்ணீரால் சுத்தம் செய்து துடைத்து விட்டார் அப்பெண்மணி.

அதற்குள், கடைக்காரர் சிறுவனுக்கான காலுறைகளுடன் வந்து விட்டார். அவற்றில் ஒரு ஜோடியை அப்பெண்மணி சிறுவனுக்கு அணிவித்து விட்டு, அவனுக்கு விலை உயர்ந்த ஒரு ஜோடிக் காலணிகளையும் வாங்கிக் கொடுத்தார். மற்ற காலுறைகளையும் ஒரு பையில் இட்டு சிறுவனிடம் தந்து விட்டு, அவன் தலையைத் தடவி, "நிச்சயம் இப்போது உனக்கு சற்று சௌகரியமாக இருக்க வேண்டும், இல்லையா?" என்று கூறினார்.

சிறுவனுக்கு விடை கொடுத்த சமயத்தில், மிக்க பிரமிப்பில் இருந்த அவன், அப்பெண்மணியின் கைகளைப் பற்றி, கண்களில் கண்ணீருடன் அவரை ஏறிட்டு நோக்கிக் கேட்டான், "நீங்கள் கடவுளின் மனைவியா ?"

எ.அ.பாலா

Monday, January 21, 2008

416. வெங்க்சார்க்கரும் இன்னும் சில முட்டாள்களும் - பாகம் 2 - இலவச கொத்தனாருக்காக

நான் எழுதிய முந்தைய பதிவுக்கு பதிலடி தரும் வகையில் நம்ம கொத்ஸ் (இலவச.கொத்தனார்) Politically correct-ஆ ஒரு பதிவு எழுதியிருக்கிறார், அவருக்கு வாழ்த்துக்கள்:)
"// .... //" இருப்பவை இ.கொ வின் கருத்துகள்.

//
அதனால நம்ம ஆட்கள் வழக்கம் போல உணர்ச்சிவசப்பட்டு கொந்தளித்து அடுத்தவனை முட்டாள் மூடன் என்றெல்லாம் திட்டி பதிவுகள் போடத் தொடங்கியாயிற்று. நம்ம பாலா போட்டு இருக்கும் இந்தப் பதிவு கண்ணில் பட்டது. ஆனா இந்த உணர்ச்சிகளை எல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த விஷயத்தை என்ன ஏதென்று பார்க்கலாமா?
//
செலக்டர்களை "முட்டாள்கள்" அப்டின்னு உணர்ச்சிவசப்பட்டு சொல்லலாமா என்று கேட்கிறார். உணர்ச்சிவசப்பட்டு கூறவில்லை. BCCIயின் கிரிக்கெட் தேர்வுக் குழு ஆதி காலத்திலிருந்து, கிரிக்கெட் அறிவும் அனுபவமும் இல்லாத, சார்புடைய முட்டாள்கள் நிறைந்ததாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கிறது. அவர்களுக்கு பிடித்த ஆட்டக்காரர்களைச் சேர்ப்பதுவும், சீனியர்களை பந்தாடுவதும் பல முறை நடந்துள்ளதை கிரிக்கெட்டை ஃபாலோ பண்ணுபவர்கள் அறிவார்கள் !!!

//
ஆனால் கம்பீர், கார்த்திக், உத்தப்பா, ரெய்னா என நல்ல தகுதியுடையவர்கள்தானே அணியில் இருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் பொழுதெல்லாம், 20-20 உலகக்கோப்பை உட்பட, சாதித்துக் காட்டியவர்கள்தானே இவர்கள்.
//
நான் ஏற்கனவே கூறியது போல ஒரு நாள் போட்டி, 20-20 அல்ல !!!! நீங்கள் கூறும் நால்வரில், இருவர் இருப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. மீதி இருவருக்கு பதில், சீனியர்கள் வேண்டும் ! எப்படியும் கார்த்திக் passenger-ஆகத் தானே இருக்கப்போகிறார்.

//
திராவிட்டும் லக்ஷ்மணும் டெஸ்ட் போட்டிகளில் எத்தனை முறை மூன்று ஓட்டங்கள் எடுக்க இடங்களில் இரு ஓட்டங்களும், இரு ஓட்டங்கள் எடுக்க வேண்டிய இடத்தில் ஒரே ஒரு ஓட்டத்துடனும் நின்றிருக்கிறார்கள்? இது மட்டுமே ஒரு 30 - 40 ஓட்டங்களாக மாறினால் அது வெற்றியை நிர்ணயிக்கும் அல்லவா?
//
இது தெரிந்தது தானே, ஆனால் இதற்கு பதிலாக ஒன்று கேட்க முடியும் !! ஃபீல்டிங் மட்டுமே வெற்றி/தோல்வியை நிர்ணயிக்கிறதா என்ன ? ஒரு பேட்ஸ்மன் முட்டை அடித்து விட்டு, 20-25 ரன்களை தடுத்து விட்டால் போதுமா ? டிராவிட்டுக்கு fitness இல்லை என்பதை ஒப்புக் கொள்ள முடியாது.

//அதே சமயம் நமது அடுத்த முக்கியமான இலக்கு 2011 உலகக் கோப்பை. அதற்கான அணியினை தயார் செய்வதில் நாம் முனைப்பாக இருக்க வேண்டும். இந்த இளைஞர்கள்தான் அந்த அணியின் முதுகெலும்பாக இருக்கப் போகிறவர்கள். அவர்களுக்கு அந்த போட்டிக்கு முன் எவ்வளவு அனுபவம் கிடைக்கிறதோ அவ்வளவு நல்லது.
//
இந்த concept-ஏ தவறு என்பது என் கருத்து. 2011-க்கு இப்போதிலிருந்தே தயார் செய்ய வேண்டும் என்பதெல்லாம் சுத்த ஹம்பக் !!! 20-20 வெற்றியை வைத்து இந்த இளைஞர்களை demi gods ஆக்க முயல வேண்டாம் ;-) அவர்களிடம் சரக்கு இருக்கிறது. ஆனால், போக வேண்டிய தூரமும் அதிகமே !!! 2011-இல், சச்சின், டிராவிட், யுவராஜ், தோனி ஆகிய நால்வருமே தேவை !

//சில மாதங்கள் முன்பு நம் நண்பர்களால் கிழவர்கள் என வர்ணிக்கப்பட்ட வீரர்கள்தான் பாகிஸ்தானோடும் சரி அவுஸ்திரேலியாவுடனும் சரி பட்டையைக் கிளப்பினார்கள். அது பற்றிய சத்தத்தையே காணும்.
//
உலகக்கோப்பை வெளியேற்றம் அவமானம் என்று தான் கூறினேனே ஒழிய, சீனியர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்றெல்லாம் கூக்குரல் நான் இடவில்லை. மேலும், ஒரு முறை கங்குலி, டெஸ்ட் போட்டிகளில் சரியாக விளையாடபோது (அதோடு, கொஞ்சம் அரசியல் செய்தபோது!), அவரை நீக்க வேண்டும் என்றும் எழுதியிருக்கிறேன். பெங்காலி பாபுக்கள் போல "கங்குலி தெய்வம்" என்ற கருத்து உடையவன் நானல்லன்... நான் கூறுவதெல்லாம், தகுதிக்கும் ஃபார்முக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்பதே !!!!!!!

நிற்க, மேலும் சில கருத்துகள்:

1. சீனியர்கள் ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டதற்கு, நவ்ஜோத் சித்துவும், கபிலும், ஜடேஜாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சித்து, கங்குலி நீக்கப்பட்டது குறித்து ஒரு திறந்த விவாதத்தில் தன்னுடன் மோதுமாறு "கர்னல்" வெங்சர்க்காருக்கு NDTV-யில் அழைப்பு விடுத்துள்ளார் !!! விவாதத்தில் தான் தோற்றால், இனி NDTV-யில் தோன்ற மாட்டேன் என்றும், வெங்க்சர்க்கார் தோற்றால் அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

2. தோனி கேட்ட (20-20 உலகக்கோப்பையை ஜெயித்த) டீமையே அவருக்கு வழங்க வேண்டும் என்ற பட்சத்தில், செலக்டர்களின் பங்கு என்ன ???? முன்னர், டிராவிட் விஷயத்தில் ஏன் அவர்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை ??? தோனி என்ன, அதற்குள் அவ்வளவு பெரிய ஆள் ஆகி விட்டாரா ? தோனியும் அரசியல் செய்வது போல் தெரிவதால், இனி உருப்பட்டா மாதிரி தான் :(

3. தற்போதுள்ள தேர்வுக்குழுவில், டெஸ்ட் / ஒரு நாள் அனுபவம் உள்ளவர்கள் வெங்க்சார்க்கரும், ராஜுவும் மட்டுமே. மற்ற மூவரும், காலணாவுக்குத் தேறாதவர் என்பது உலகமறிந்த விஷயம் தானே ! மேலும், தாதாவை நீக்குவது பற்றி BCCI பெருந்தலைகளுக்கு தெரியாது என்பதையோ, அவர்களின் tacit approval இன்றி இது நடந்திருக்கும் என்பதையோ ஒருவர் நம்பினால், அவரைப் பார்த்து நான் பரிதாபப்படுகிறேன் :)

இறுதியாக, நமது தேர்வாளர்கள் முட்டாள்கள் மட்டும் அல்ல, திமிர் பிடித்த, தலைக்கனம் கொண்ட கோமாளிகள் கூட !!!

எ.அ.பாலா

Sunday, January 20, 2008

415. வெங்க்சார்க்கரும் இன்னும் சில முட்டாள்களும்

அடப்பாவிகளா, அம்பயர்களும், ரெ·ப்ரியும், நிறவெறி பிடித்த ICCயும் தான் இந்திய அணிக்கு எதிராக உள்ளன என்றால், நம்ம BCCI தேர்வாளர் குழுவும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு விட்டது போல இன்று டிராவிட்டும், கங்குலியும், முரளி கார்த்திக்கும், லஷ்மணும், நடைபெறவுள்ள (இந்திய-ஆஸ்திரேலிய-ஸ்ரீலங்கா) முக்கோண ஒரு நாள் போட்டிகளுக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதுவும், நேற்று பெர்த்தில் மகத்தான வெற்றி பெற்ற இந்திய அணியினரை demoralize செய்யும் விதத்தில், நான்காவது டெஸ்ட் நடைபெறவுள்ள சூழலில் இதைச் செய்திருப்பதைப் போல ஒரு பைத்தியக்காரத்தனம் இருக்க முடியாது !!!!

Horses for Courses என்ற வகையில் லஷ்மணும், தற்போதைய form-இன் அடிப்படையில் கங்குலியும் நிச்சயம் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்! வெங்க்சார்க்கருக்கு கங்குலி மேல் என்ன கடுப்போ ? BCCI-இல் கோலோச்சும் "மும்பை மாபியா" எப்போதும் போல தன் கைவரிசையைக் காட்டியிருக்கிறது. மொகீந்தர் அமர்நாத் "Selectors are a bunch of Jokers" என்று கூறியதை இன்னும் இவர்கள் நிரூபித்த வண்ணம் உள்ளனர்!

இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றாலும், ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும்போது, அணியில், இளைஞர்களும், அனுபவமிக்கவர்களும் சம அளவில் இருத்தல் அவசியம். ஒரு நாள் பந்தயம் 20-20 விளையாட்டு அல்ல !!! என்னளவில், சாவ்லா, சுரேஷ் ரெய்னா, பிரவீன் குமார் ஆகியோரை காத்திருக்க வைப்பதில் தவறொன்றும் இருப்பதாகத் தோன்றவில்லை.

பாவம், தினேஷ் கார்த்திக்குக்கு இருக்கும் அதிர்ஷ்டம் முரளி கார்த்திக்குக்கு இல்லை :( அது போலவே, யுவராஜ் form-இல் இல்லாத நிலையில், டிராவிட், லஷ்மண், கங்குலி என்று (தற்போது சிறப்பாக ஆடி வரும்) அனுபமிக்க மூவரையும் ஒரு சேர நீக்கியிருப்பது தெளிவான கிறுக்குத்தனம் !!! தேர்வாளர்கள் இதற்கு முன்னமே ஒரு மடத்தனம் செய்ததை குறிப்பிட வேண்டும். சகீர் கானுக்கு காயம் ஏற்பட்டபோது அவருக்கு பதிலாக, VRV சிங் என்ற காலணாவுக்கு உபயோகம் இல்லாத ஒரு பந்து வீச்சாளரை ஆஸ்திரேலியாவுக்கு (ஊர் சுற்றிப் பார்க்க!) அனுப்பியது தான் அது !!!

நடக்கவிருக்கும் ஒரு நாள் போட்டித் தொடரில் இந்தியா மோசமாக விளையாடி தோற்கும் பட்சத்தில், இந்த தேர்வாளர்கள் அதற்கு பொறுப்பேற்று பதவி விலகுவார்களா ???? தேர்வாளர்களுக்கு BCCI சம்பளம் என்று எதுவும் வழங்குவதில்லை என்றாலும், அவர்களின் சுகமான பிரயாணத்திற்கும், வசதியான ஹோட்டல்களில் தங்குவதற்கும், மூக்கு பிடிக்க தின்பதற்கும், குடித்து கும்மாளம் அடிப்பதற்கும், தினப்படிக்கும் BCCI தண்டம் அழுது கொண்டு தான் இருக்கிறது என்பது நிஜம்!!! நமது தேர்வாளர்களே, "Go India Go" என்றில்லாமல், "Go Aussie Go" என்றிருப்பது தான் விந்தையிலும் விந்தை :(

என்று தான், சார்பில்லாத, டெஸ்ட் / ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட, விஷய ஞானமுள்ள மனிதர்கள் தேர்வாளர்களாக நியமிக்கப்படுவார்களோ, புரியவில்லை :(

எ.அ.பாலா

414. வைணவ திவ்யதேசம் 8 - திருக்கபிஸ்தலம்

Photo Sharing and Video Hosting at Photobucket
இவ்வைணவ திவ்யதேசம் பாபனாசத்திலிருந்து 3 கிமீ தொலைவில், கும்பகோணத்திற்கு அருகே அமைந்துள்ளது. வாலியும் சுக்ரீவனும் இங்கு பெருமாளை வழிபட்டதால், இப்புண்ணியத் தலம் கபிஸ்தலம் (கபி = வானரம்) என்ற பெயர் பெற்றது. இத்தலத்திற்கு கிருஷ்ணாரண்ய ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு. கபிஸ்தலத்தோடு, திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை ஆகியவையும் சேர்ந்து பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Photo Sharing and Video Hosting at Photobucket
கிழக்கு நோக்கி கிடந்த திருக்கோலத்தில் அருள் பாலிக்கும் மூலவ மூர்த்திக்கு ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் என்ற திருநாமம். உத்சவரின் திருநாமம் கஜேந்திர வரதன். தாயார் ரமாமணிவல்லி மற்றும் பொற்றாமரையாள் என்று அழைக்கப்படுகிறார். தீர்த்தமும் விமானமும் முறையே கஜேந்திர புஷ்கரிணி, ககநாக்ருதி விமானம் என்றும் அறியப்படுகின்றன. கபிலத் தீர்த்தம் என்ற புண்ணிய நீர்நிலையும் இங்கு உள்ளது. ஆஞ்சநேயரும் பெருமாளை இங்கு வழிபட்டார் என்பதற்கு ஒரு பழங்கதை உண்டு.

தலபுராணம்:
ஒரு சமயம், மகாவிஷ்ணுவின் பரம பக்தனான இந்திரத்யும்னன், துர்வாச முனிவரால் சபிக்கப்பட்டு, கஜேந்திரன் என்ற யானை உருவில் பெருமாளுக்கு மலர்ச்சேவை செய்து வந்தான். அவனைப் போலவே, குஹ¤ என்ற கந்தர்வன் அகத்திய முனியின் கோபத்துக்கு ஆளாகி, ஒரு முதலையாக உருமாறி கபிஸ்தலத்தில் உள்ள தடாகத்தில் வசித்து வந்தான்.

Photo Sharing and Video Hosting at Photobucket
ஒரு முறை, கஜேந்திரன் தடாகத்தில் தாமரை மலர்களை பறித்துக் கொண்டிருந்தபோது, அவன் காலை அந்த முதலைப் பற்றியது. எவ்வளவு முயன்றும் விடுபடமுடியாமல், கஜேந்திரன் பெருமாளைத் துதித்து பெருங்குரலெடுத்து தன்னைக் காப்பாற்றுமாறு அழைக்க, கருடவாஹன ரூபராய் தோன்றிய பரந்தாமன் திருச்சக்ரத்தை வீசி முதலையை அழித்ததார். கஜேந்திரனின் சேவையையும், பக்தியையும் மெச்சி அவனுக்கு பெருமாள் மோட்சம் அருளினார். அதனாலேயே, இங்கு கிடந்தருளியுள்ள எம்பெருமான் 'பாப விமோசன' குணம் உடையவராக கருதப்படுகிறார்.

இத்திருத்தலத்தை திருமழிசையாழ்வார் ஒரு திருப்பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

2431@
கூற்றமும் சாரா* கொடுவினையும் சாரா* தீ
மாற்றமும்* சாரா வகையறிந்தேன்*
ஆற்றங்கரை கிடக்கும்* கண்ணன் கடல்கிடக்கும்*
மாயன் உரைக்கிடக்கும்* உள்ளத்து எனக்கு.


காவிரி ஆற்றங்கரையான கபிஸ்தலத்தில் பள்ளி கொண்டிருக்கும் கண்ணனும், பாற்கடலில் யோக நித்திரையில் உள்ள மாயவனும் ஆன எம்பெருமான் சதா சர்வ காலமும் என் சிந்தையில் குடியிருப்பதால், என்னை மரண பயமும், கொடும்பாவங்களும், தீயனவைகளும் அண்டாமல் இருப்பதற்கும், அந்த மாயப்பிரானை பற்றுவதற்கும் ஆன வழிவகையை நான் கண்டு கொண்டேன் !

Photo Sharing and Video Hosting at Photobucket
ஒற்றைப் பிரகாரம் உடைய சிறிய கோயிலிது. மூன்று நிலைகளை உடைய ராஜகோபுரத்தை படத்தில் காணலாம். இத்திருக்கோயிலில் ஆண்டாளுக்கும் சந்தான கிருஷ்ணனுக்கும், யோக நரஸிம்மருக்கும், சுதர்சன ஆழ்வாருக்கும், கருடனுக்கும், பிற ஆழ்வார்களுக்கும் சன்னிதிகள் உள்ளன. பங்குனி மாதத்தில் கஜேந்திர மோட்சம் கொண்டாடப்படுகிறது. இதைத் தவிர, வைகுண்ட ஏகாதசியும், ஸ்ரீராமநவமியும், அக்ஷய திருதியையும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, January 19, 2008

413. அந்தோணிக்கு உதவி வேண்டி

அன்பு நண்பர்களே,

சமூக உதவி சார்ந்த விதயங்களில் மிகுந்த அக்கறை உடைய சிங்கை அன்பு அந்தோணி என்ற இளைஞருக்கு உதவுவது குறித்து அனுப்பிய மின்மடலில், ஏற்கனவே மதுமிதா தனது நட்சத்திர வாரத்தில் எழுதிய பதிவின் சுட்டியை அளித்து, அந்தோணிக்கு நாம் கூட்டாகச் சேர்ந்து உதவி செய்ய வேண்டும் என்ற ஆலோசனையையும் முன் வைத்தார்.
**************************
From Madhumithaa's posting:
இசைதான் வாழ்க்கை என்று இசையைக் கற்ற அக்குழந்தை பாதியில் படிப்பை நிறுத்திய சோகத்திற்கு காரணம், வாழ்ந்தே ஆகவேண்டுமே என்ற தீராவிருப்பே.

பி.ஏ இசை இரண்டாம் வருடம் முடித்துவிட்டு மூன்றாம் வருடம் செல்ல இயலவில்லை.மூன்று வருட திரையிசை முயற்சிக்குப் பிறகு இசையை விட்டு விட்டு, கணினியில் ஏதேனும் வேலை செய்ய வேண்டும். யாரையும் சார்ந்திருக்காது தன் உழைப்பில் வாழ வேண்டும் என்பது இவரின் விருப்பம்.

இதில் என்ன விஷயம் இருக்கிறதென்று பார்க்கிறீர்களா?இதுதான் விஷயமே. மனம் தளராத ஊக்கம் குறையாத இக்குழந்தை வசிப்பது ரெட்ஹில்ஸில்.

அப்போது அக்குழந்தைக்கு வயது 11. ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தவறி ஒரு கிணற்றில் விழ நேர்ந்த விபத்தில், கழுத்துக்குக் கீழே எந்த உணர்வும் இல்லை. குழந்தையைப் பார்ப்பது போன்றே இவரைக் கவனிக்க வேண்டும். கைகள் மட்டும் உணர்வுடன் செயல்படும். கைகளும் மூளையும் போதும் என்கிறார் தான் உழைப்பதற்கு.

பரிதாபத்தையோ, அனுதாபத்தையோ இவர் எதிர்பார்க்கவில்லை. அன்பையும் நட்பையும் போற்றும் வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் அன்புக் குழந்தை. உழைப்பின் மதிப்பறிந்த இக்குழந்தையை வாழ்த்துவோம். உரியதை அளிப்போம்.
********************************************

இம்முயற்சிக்கு அன்பு தன் பங்காக ரூ 10000 அனுப்பியும் உள்ளார். அவர் தந்த ஊக்கமும், எனது முந்தைய சமூக உதவி முயற்சிகளுக்கு நீங்கள் அளித்துள்ள ஆதரவும் தான், இந்த பதிவின் வாயிலாக இந்த வேண்டுகோளை உங்கள் முன் வைக்கத் தூண்டுதலாக அமைந்தது.

புதிய பதிவர்களுக்கு ஒரு தகவல்: இது வரை கௌசல்யா என்ற ஏழை மருத்துவ மாணவியின் படிப்புக்கும், இன்னும் சில கல்வி சார்ந்த விதயங்களுக்கும் உங்கள் ஆதரவோடு, உதவி தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேலும், நான்கு பெண் குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கும், அலெக்ஸாண்டர் என்ற ஆதரவற்ற முதியவரின் கண் மருத்துவ சிகிச்சைக்கும் நீங்கள் செய்த பொருளுதவியின் வாயிலாக, அக்குழந்தைகளும், முதியவரும் குணமடைந்து நலமாக உள்ளனர் என்பதை இங்கே குறிப்பிட விழைகிறேன்.

பார்க்க: நண்பர்களுடன் சமூக சேவை

********************************
அந்தோணி தன்னைப் பற்றி:

பல முறை இந்த வாழ்க்கை என்னை சந்தோஷப் படுத்தியிருக்கிறது.
அதற்குச் சமமாக துக்கப்படுத்தியும் இருக்கிறது. (நாணயத்தின் இரு பக்கங்கள்...?)

ஒரு உண்மயை இங்கே விளம்பியாகவேண்டியது கட்டாயம்.

என்னதான் Positive Anthony என்று பெயர் வைத்துக் கொண்டிருந்தாலும்... துயரமும் துன்பமும் என்னை வாட்டும்போது பலமுறை (எண்ணிக்கை நினைவில்லை) நானும், தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன்.

கொடூரமான மனவேதனைகளை அனுபவித்திருக்கிறேன்.
மனதின் வலி தாங்காமல்....
இரவுகளில் வெடித்து அழுதிருக்கிறேன்.

"இறைவா! இந்த நொடியே என்னை எடுத்துக்கொள்," என்று
புழுவாய்த் துடித்துக் கெஞ்சியிருக்கிறேன்.

என் தந்தை அடிக்கடி ஒரு வார்த்தை சொல்வார்.

"சின்னதொரே...! ராஜா...!," "நாங்க (பெற்றோர்) இருக்கும்போதே கடவுள் உன்னை எடுத்துக்கணும்னு வேண்டிக்கடா...!"

அவர் சொல்வது எந்த அளவு சத்தியம், நிதர்சனம், என்பதை அவர் இருக்கும்போதே எனக்கு வாழ்க்கை உணர்த்தியிருக்கிறது.

ஊனமுற்ற தன் மகனுக்கு, உணவிடுவதைத் தவிர, உடலளவிலோ, வேறு வசதிகளோ... எதுவுமே செய்ய இயலாத ஒரு வயதான தகப்பனாக...
அவர்...

தான் அழுவதைக்கூட மறைக்கப் பார்ப்பார். (வேறு பக்கம் திரும்பிக் கொள்வார். உடல் குலுங்கும். கண்களில் மெளனமாய் வான் மழை வழிந்தோடும்.)

28-6-2007 விதி என் வாழ்வின் சூரியனை விழுங்கிய நாள்.

என் தந்தை இறைவனடி சேர்ந்தார்.

இன்னமும் அந்த அதிர்ச்சியில்... இழப்பில்... இருந்து என்னால் வெளிவர முடியவில்லை.

என்னடா இவன் Positive Anthony என்று பெயர் வைத்துக் கொண்டு,
இப்படி அநியாயத்துக்கு அழுதுத் தொலைக்கிறானே, என்று நீங்கள் நினைக்கலாம்.

இல்லை!

நான் என்ன தெய்வப் பிறவியா?

எதற்கும் அசைய மாட்டேன் என்று சொல்வதற்கு.

"சாத்வீகனன்றோ நான்?,
சொல்லடி என் சக்தி...?"
என்றுக் கதறத் தோன்றுகிறது.

எத்தனை துன்பங்களைச் சந்தித்திருந்தாலும்....
இப்போது...
நான் மிக, மிக சந்தோஷமாக இருக்கிறேன்.

இயற்கை என்னும் அந்த மகா சக்தி (கடவுள்), ஒரு கதவை மூடினால், மற்றொரு கதவைத் தயாராகத் திறந்து வைத்திருக்குமாம்.

ஆம். இது நிஜம்.

என் கழுத்துக்கு கீழ் முடக்கப்பட்ட சக்தி முழுவதும்...
என் தலையில்(மூளையில்)...,
கைகளில் மாற்றப்பட்டிருப்பதாக உணர்கிறேன்.

*****************************************

தனது வாழ்க்கையை நம்பிக்கையுடனும், தெம்புடனும் எதிர்கொண்டிருக்கும் அந்தோணிக்கு தற்போது மிகவும் அவசியமானவை, ஒரு நல்ல மெத்தையும், ஒரு மடிக்கணினியும், ஒரு சக்கர நாற்காலியும். நாம் கூட்டாகச் செய்யும் பொருளுதவி மூலம், இம்மூன்றையும் அவருக்கு வாங்கித் தர முடியுமானால், அவருக்கு அது பெரிய உதவியாக அமையும்.

அந்தோணிக்கு உதவ விரும்பும் நண்பர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை பின்னூட்டத்தில் அளித்தால், பணம் அனுப்புவதற்குத் தேவையான வங்கி விவரங்களை அனுப்புகிறேன். எனது மின்னஞ்சல்: balaji_ammu@yahoo.com
முந்தைய உதவி முயற்சிகளில் பங்கேற்ற நண்பர்கள் வசம், எனது வங்கிக் கணக்கு விவரங்கள் இருக்கும்.

அந்தோணிக்கு நேரடியாக உதவ விரும்பினால், அவரது வலைப்பதிவில் அவரைப் பற்றிய தகவல்களும், தேவையான விவரங்களும் உள்ளன. சில விவரங்களை கீழ்க் காணவும்.

Address:
S. Anthony Muthu,
C/o J. Dharmaraj, 5/96 Cheran street, K.K.Nagar, Pammadhukullam, Redhills, Chennai-52, Tamilnadu, India
Pin Code No: 600052

Tele: 26323185,
Mobile No: 09444496600,
E.mails:
anthonymuthu1983@yahoo.com
anthonymuthu1983@gmail.com

J. Dharmaraj
Indian bank/ Chennai/ Redhills Branch.
Old Account No.32318
New Account No. 46929660-7


இம்முயற்சிக்கு உங்களால் இயன்ற ஆதரவு தருமாறு பணிவான வேண்டுகோளுடன்

எ.அ.பாலா

Tuesday, January 15, 2008

412. ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது சரியா?

சென்ற ஆண்டு,சில நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி தந்தது, இவ்வாண்டு, AIAFB (All India Animal Welfare Board) மற்றும் சில மிருக வதை எதிர்ப்பு அமைப்புகளும் உச்சநீதி மன்றம் சென்று, ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை வாங்கி விட்டன. பண்டைய தமிழர் நாகரிகத்தில் "ஏறு தழுவுதல்" என்ற பெயரில் ஒருவர் அல்லது இருவர் காளையை அடக்குவது, இப்போது "ஜல்லிக்கட்டு" என்ற பெயரில் ஒரு கூட்டமே, மிரண்டு ஓடும் காளை மீது பாய்வது என்ற அளவில் இருக்கிறது. இதில் வீரம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தக் கூட்டத்திடமிருந்து எப்படியாவது தப்புவதற்கு காளைகள் அலைபாயும்போது, பலருக்கும் காயம் ஏற்படுகிறது தான் மிச்சம் !!!

ஆனால், இந்த திடீர் தடை சரியானது இல்லை என்பதற்கு இரண்டு காரணங்கள் கூற முடியும்:

1. நீதிமன்றத்தில் இரண்டு பக்க கருத்துகளையும் கேட்டறிந்து, இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரை,
status quo-வை நீதிமன்றம் அனுமதித்திருக்க வேண்டும். அதாவது, சென்ற ஆண்டு போலவே, சில நிபந்தனைகளுடன் போட்டியை நடத்துவதற்கு ! போட்டிக்கு இரண்டு நாட்கள் முன் தடை விதித்தது, மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

2. ஜல்லிக்கட்டில் வதைக்கப்படுவதைக் காட்டிலும், பல சூழல்களில் மிருகங்கள் பயங்கரமான கொடுமைக்கு உள்ளாவது, ராமலிங்க அடிகளார் வழி வந்த, இந்த மிருக வதை எதிர்ப்பு ஆர்வலர்கள் அறியாத ஒன்று என்பது நம்பக்கூடியதாக இல்லை !

திரைப்படங்களில் (மிகச்சமீப காலத்து!) சண்டைக் காட்சிகளில், கோழிகளும், புறாக்களும் சண்டையிடுபவர்கள் மீது வீசப்படுகின்றன. வில்லன் கூட்டத்து அடியாட்கள், அந்த பறவைகள் மேல் விழுவதால், பல நசுங்கி உயிரை விடுகின்றன. அது போலவே, சில காட்சிகளில், வேகமாக ஓடி வரும் குதிரைகளை ( அவற்றின் முன்னங்கால்கள் முன் திடீரென்று கயிற்றை உயர்த்துவதன் மூலம்) தடுக்கி விழ வைக்கும்போது, திரையில் பார்ப்பதற்கு த்ரில்லிங்காக இருக்கலாம் !!! ஆனால், அந்த குதிரைக்கு பயங்கரமாக அடி படுவதற்கு வாய்ப்பு அதிகம். அதன் கழுத்து எழும்பே சில சமயங்களில் முறிந்து விடும். அச்சமயம், அதைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை :(

மிருகவதை என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், ரேக்ளா பந்தயத்தை அனுமதிப்பதிலும் அர்த்தம் இருப்பதாகத் தோன்றவில்லை. காளைகளை சாட்டையால் அடித்து விரட்டி அவைகளை அதிவேகமாக ஓட வைக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தானே! அது போலவே, (சகமனிதர்கள் மேல் வெளிப்படுத்துவதைக் காட்டிலும்!) மிருகங்களின் மேல் பரிவு காட்டும், மிருகவதையை எண்ணி தார்மீகக் கோபம் கொள்ளும், செலக்டிவ் அம்னீஸியா உடைய இந்த அறிவுஜீவிகள், குதிரைப் பந்தயங்களைக் கண்டு கொள்ள மாட்டார்கள்! ஏனெனில், அவை பணக்காரர்கள் சம்பந்தப்பட்ட (ஆனால், சாதாரண மக்களும் பணத்தை இழக்கும்!) மேட்டுக்குடி 'வீர' விளையாட்டு என்பதால்!

அப்பந்தயங்களிலும், குதிரைகளை சவுக்கால் அடி அடியென்று அடித்துத் தானே ஓட்டுகிறார்கள். மேலும், ஓரிரண்டு ஆண்டுகள் பந்தயங்களில் பங்கு பெற்ற குதிரைகள், அவைகள் பந்தயங்களுக்கு லாயக்கில்லை என்ற நிலையில், சுட்டுக் கொல்லப்படுகின்றன என்றும் கேள்விப்பட்டதுண்டு :(

கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயம், ஏதோ ஒரு சர்க்கஸில் மிருகங்களை சரியாக கவனிக்கவில்லை என்று கூறிக் கொண்டு, குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிகவும் ரசிக்கும் மிருகங்களின் சாகச நிகழ்ச்சிகளையே சர்க்கஸிலிருந்து நீக்க வேண்டிய சூழலை உருவாக்கிய பெருமையும் இந்த 'ஆர்வக் கோளாறர்களையே'(!) சாரும்! பள்ளிப்பருவத்தில் தீவுத்திடலில் நடைபெற்ற ஜெமினி சர்க்கஸை எண்ணிப் பார்க்கிறேன், நாஸ்டால்ஜியா ...

வெள்ளெலிகள், முயல்கள், குரங்குகள், குதிரைகள் ஆகியவை மேல் நடத்தப்படும் (வலி மிக்க) அறிவியல் பரிசோதனைகள் கூட, மிருகவதை என்ற வரையறைக்குள் தான் வருகின்றன என்பதை இங்கே நினைவு கூர்வது அவசியமாகிறது. இறைச்சிக்காக, விலங்குகளைக் கொல்வதை, தனி மனிதனின் உணவு விருப்பம் சார்ந்த உரிமை என்ற அளவில் நோக்கும்போது அது தவறில்லை என்றாலும், அவைகளைக் கொல்வதில் நம் நாட்டில் கடைபிடிக்கப்படும் முறைகள் சற்றுக் கொடூரமானவையே!

வலியற்ற மரணம் என்பது, அளவில் சிறியதாக உள்ள கோழிகளுக்கும் ஆடுகளுக்கும் வேண்டுமானால் சாத்தியப்படலாம். ஆனால், இறைச்சிக்காகக் கொல்லப்படும் மாடுகள் மிகுந்த வலியை அனுபவித்த பின்னரே உயிரை விடுகின்றன என்பது தான் உண்மை! நான் வாசித்தறிந்த, அவற்றின் சாவின் கொடூரத்தை இங்கு விவரிக்க விரும்பவில்லை :(

பல கோழிகளின் கால்கள் ஒன்றாகக் கட்டப்பட்டு, தலைகீழாக அக்கோழிகள் சைக்கிள் கைப்பிடியில் தொங்க விடப்பட்டு, கசாப்புக் கடைக்கு எடுத்துச் செல்லப்படும் கொடுமையான காட்சியை, பல சமயங்களில் நாம் பார்க்கிறோம். அது போலவே, மூச்சு விடக்கூட முடியாத வகையில், 10 மாடுகள் பயணிக்கக்கூடிய வண்டியில் 25 மாடுகள் ஏற்றப்பட்டு, பலமணி நேர (மரண வேதனை) தரும் கொடும்பயணத்தின் முடிவில், வெட்டப்படும் இடத்தை மாடுகள் அடைகின்றன! எப்படியும் சிறிது நேரத்தில் சாகப் போகிற ஜென்மங்களுக்கு சௌகரியம் எதற்கு என்ற எண்ணம் தானே இதற்குக் காரணம் ????

மேற்கூறியதை வைத்துப் பார்க்கும்போது, ஜல்லிக்கட்டு ஒன்றும் மிருகங்களுக்கு இழைக்கப்படும் பெரிய அநீதியாக எனக்குத் தோன்றவில்லை! மேலும், ஸ்பெயின் போன்ற நாடுகளில், போட்டியில் அடக்கப்பட்ட காளைகளை, மிகக் கூர்மையான கத்தியை அவற்றில் உடம்பில் பாய்ச்சியே, துளியும் இரக்கமற்ற வகையில் கொன்று விடுவதைப் பார்க்கும்போது, நம்மூர் ஜல்லிக்கட்டை கொடுமையான விளையாட்டாக எண்ணிப் பார்க்க முடியவில்லை!

என்ன, போட்டிகளில் பங்கு பெறும் காளைகளுக்கு சாராயம் கொடுத்து, அவற்றின் ஆசன துவாரத்தில் மிளகாய்ப் பொடி ஏற்றி கொடுமைப் படுத்தாமல், காளைகளை அடக்க முன் வருபவர்களுக்கும், பொது மக்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்த அனுமதிக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து.

தீபாவளியின் போது கூடத் தான், வெடிச் சத்தத்தால், மிருகங்களும் பறவைகளும் (குழந்தைகளும், வயதானவர்களும், நோயாளிகளும்) பெரும்பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குறைந்தபட்சம், சத்தம் ஏற்படுத்தும் எல்லா வகை (ஊசிப்பட்டாசு முதல் ஹைட்ரஜன் பாம் வரை) பட்டாசுகளும் தடை செய்யப்படுவதை முன் வைத்து இந்த மிருகவதை எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றால், நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் !!! அதென்ன, தீபாவளிக்கு மட்டும், குறிப்பிட்ட டெசிபல்களுக்குள் சத்தம் ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்க அனுமதித்து, நிபந்தனைக்கு உட்பட்ட ஸ்பெஷல் status !!! (அந்த சட்டத்தை யாரும் மதிப்பதில்லை என்பது வேறு விஷயம்!) அது போலவே, ஜல்லிக்கட்டையும் சிலபல நிபந்தனைகளோடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்பது தான் நான் கூற வருவது.

அது போலவே, இந்த ஆர்வலர்கள், கோயிலில் கோழிகள்/ஆடுகள் (நேர்ந்து கொண்டதற்காக) பலியிடப்படுவதையும், பக்ரீத் பண்டிகையின் போது ஆடுகள்/ஒட்டகங்கள் வெட்டப்படுவதையும் எதிர்த்து விடாமல் போராடலாம். இது போல, அவர்கள் போராடுவதற்கு (ஜல்லிக்கட்டு தவிர்த்து!) எவ்வளவோ விஷயங்கள் இருக்கத் தான் செய்கின்றன !!!

எ.அ.பாலா

Wednesday, January 09, 2008

'Monkey' business !

ஹர்பஜன் சிங், சைமண்ட்ஸ் மேல் பிரயோகித்ததாகக் கருதப்படும் 'குரங்கு' என்ற வார்த்தை நிறவெறி சார்ந்த வசவு தானா என்பதில் மிக்க கருத்து வேறுபாடு நிலவுகிறது !!!  சில கருத்துகளைப் பார்ப்போம் !

1. ஹர்பஜன் ஹனும பக்தராக இருக்கக் கூடும், அதனாலேயே, பலம் வாய்ந்த சைமண்ட்ஸை (அவர் முதல் இன்னிங்க்ஸில் 162 ரன்கள் எடுத்த காரணத்திற்காக!) பாராட்டும் விதமாக, ஹர்பஜன் அவரை 'குரங்கு' என்று கூறியிருக்கலாம் என்று கருத வாய்ப்புள்ளது என்று பஜ்ரங் தல் சார்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் கூறுகின்றனர் !!!!

அனுமனின் கடாட்சம் சைமண்ட்ஸுக்கு பரிபூரணமாக இருந்த காரணத்தினாலேயே, அனுமன் அம்பயர் ரூபத்தில் சைமண்ட்ஸுக்கு உதவி புரிந்ததில், அவருக்கு இரண்டு "உத்தி" கிடைத்தது என்பதும் வெள்ளிடை !  இதைப் புரிந்து கொள்ளாமல், அறிவில்லாத அந்த மேட்ச் ரெஃப்ரி, ஹர்பஜனுக்கு தண்டனை வழங்கி, ஹனும பக்தர்களின் மனதை புண்படுத்தி விட்டார் என்று பஜ்ரங் தல் சார்ந்த கிரிக்கெட்
ரசிகர்கள் மேலும் கூறுகின்றனர் !!! 

2. இந்தியர்கள் குரங்கை கேவலமாகப் பார்ப்பதில்லை.  ராஜஸ்தானில் உள்ள குரங்குக் கோயிலைப் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள்.  அங்கு வரும் பக்தர்களின் உபயத்தில், அவ்விடத்தில் உள்ள குரங்குகள் சுகபோகமாக வாழ்கின்றன !  இதை சைமண்ட்ஸுக்கு எடுத்துரைக்க நமது அணியினர் தவறி விட்டதன் விளைவே, இந்தப் பிரச்சினைக்குக் காரணம் !

3. ஹர்பஜன் பஞ்சாபியில் கூறிய "மெனு கி" என்பது சைமண்ட்ஸுக்கு monkey என்று காதில் விழுந்தது, ஹர்பஜன் குற்றமா (அல்லது) பஞ்சாபி படிக்காத சைமண்ட்ஸின் குற்றமா ?  "மெனு கி" என்பதற்கு அர்த்தம் " எனக்கு என்ன?" (ஹிந்தியில் 'முஜே கியா'!)

4. பொதுவாகவே, குழந்தைகள் செய்யும் குறும்பை நாம் "குரங்குச் சேட்டை" என்று செல்லமாக பாராட்டுகிறோம் தானே ??? 

5. சமீபத்தில் டிவியில், அமெரிக்காவில்  (குரங்குகளுக்கும் குழந்தைகளுக்கும் இடையே) நடந்த ஒரு போட்டியைக் காட்டினார்கள்.  முதலில், கணினித் திரையில் தோன்றும் எண்களை, விரல்களால் தொட்டு வரிசைப்படுத்த வேண்டும், அடுத்த கட்டத்தில், திரையில் தோன்றி 2 நொடிகளில் மறைந்து விடும் எண்களை ஞாபகம் வைத்துக் கொண்டு வரிசைப்படுத்த வேண்டும்.  இப்போட்டியில், குரங்குகளே, எண்களை வரிசைப்படுத்த குறைந்த நேரம் எடுத்துக் கொண்டு, வெற்றி பெற்றன என்பது குறிப்பிட வேண்டியது !  எனவே, குரங்கை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் :)

6. மனிதர்களுக்கு முன்பாகவே, கடல் மேல் ஒரு பாலத்தைக் (ராமர் சேது) கட்டியது வானர சேனை என்பதை மறந்து விடக் கூடாது !  இந்த மேட்டரை ஆஸ்திரேலிய வீரர்களுக்கு புரிய வைக்காதது தான்,  நாம் செய்த மாபெறும் தவறு !

7. குரங்கு நாம் செய்ததை நம்மை விடச் சிறப்பாக திரும்பச் செய்யும் திறன் பெற்றது !  ஹர்பஜனின் சுழல் பந்து வீச்சை நன்றாக கவனித்து, அது போலவே சைமண்ட்ஸ் 2வது இன்னிங்க்ஸில் பந்து வீசி, 3  விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு அடி கோலினார் :)  பின்னர், (ஒரு உவமானமாக!) 'குரங்கு' என்றால் அவர் கொதித்துப் போக வேண்டிய அவசியம் தான் என்ன ????  அது போலவே, சைமண்ட்ஸ் குரங்கு போல பாய்ந்து பந்து தடுப்பதில் வல்லவர் என்றும் எடுத்துக் கொள்ளலாமே!!  சைமண்ட்ஸை சிறந்த ஃபீல்டர் என்று ஜாண்டி ரோட்ஸே பாராட்டியிருக்கிறார், தெரியுமா ?

8. குரங்கு என்றால் இளக்காரமா ? "Dunston checks in" என்ற  ஹாலிவுட் படத்தில், ஒரு சிம்பன்ஸி குரங்கு சாதுர்யமாக பல வேலைகள் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.

9. சைமண்ட்ஸ் மற்றும் மேட்ச் ரெப்ரியின் நடவடிக்கைகளால், நம்மூர் ராம நாராயணன் மற்றும் தேவர் பிலிம்ஸ் தியாகராஜன் ஆகியோர் மனமுடைந்து போயிருக்கின்றனர் !!!  அவர்கள் படங்களில் கதாநாயகன் / நாயகிகளை பல சமயங்களில் இக்கட்டிலிருந்து குரங்குகள் தான் காப்பாற்றுவது போல காட்சிகள் வரும் :)

"குரங்கில்" இவ்வளவு மேட்டர் இருக்கும்போது, சரியா எதையும் விசாரிக்காம, நம்ம மேட்ச் ரெஃப்ரி இப்படி தடாலடியா ஹர்பஜனுக்கு தடை விதிக்கறது, கொஞ்சமாவது சரியா, சொல்லுங்க ???

எ.அ.பாலா

Sunday, January 06, 2008

410. திருட்டுக் கேப்டன் பாண்டிங்குக்கு "5 டெஸ்ட்" தடை விதிக்கலாமா?

சிட்னியில் நடந்த 2வது டெஸ்ட்டில், தோனியின் காலுறையில் பட்டு எழும்பிய பந்தை காட்ச் பிடித்து, ரிக்கி பாண்டிங் அதி அமர்க்களமாக அம்பயரிடம் அப்பீல் செய்தார். பந்து மட்டையில் படவில்லை என்பது வேறு விஷயம், அந்த களவாணி கேப்டன் காட்ச் பிடித்த அழகை படத்தில் பாருங்கள் !!! பந்து தரையில் பட்டுக் கொண்டிருக்கிறது :)

2003-இல், இதே போல, தரையில் பட்டு பிடித்த காட்ச்சுக்கு அப்பீல் செய்த பாகிஸ்தானி கேப்டன் ரஷித் லத்தீபுக்கு, அடுத்த 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை விதித்து, தண்டனை வழங்கப்பட்டதை இங்கே நினைவு கூர்வது அவசியமாகிறது !!!

இந்திய நிருபர் ராஜாராமன், டெஸ்ட் முடிந்து நடந்த பேட்டியில் பாண்டிங்கை, அந்த காட்ச் சரியாக பிடிக்கப்பட்டதா என்று கேட்ட கேள்விக்கு, திருவாளர் களவாணிக் கேப்டன் பயங்கர கடுப்பாகி, "பந்து நிச்சயம் தரையில் படவில்லை, என்னுடைய நேர்மையை சந்தேகித்தால், நீங்கள் இங்கு என்னை கேள்வி கேட்பதில் அர்த்தமில்லை" என்று சொன்னதை டிவியில் பார்த்தபோது, பாண்டிங்குக்கு "மரை கழண்டு" விட்டதோ என்ற சந்தேகம் வந்ததென்னவோ நிஜம் :)

இன்று, பிரபலமான ஆஸ்திரேலிய கிரிக்கெட் விமர்சகரான பீட்டர் ரேபாக், பாண்டிங் உடனடியாக கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டுமென்றும், பாண்டிங் ஆஸ்திரேலிய அணியை வெறி நாய்க் கூட்டமாக மாற்றி விட்டார் என்றும் பத்திரிகை ஒன்றில் சாடியுள்ளார் !!!

Please read:
2 குருட்டு, ஆஸ்திரேலிய அடிவருடி அம்பயர்களும், 1 களவாணி கேப்டனும்

எ.அ.பாலா

409. நிறவெறி பிடித்த தென்னாபிரிக்க மேட்ச் ரெ·ப்ரி

ஹர்பஜன் மேல் சைமண்ட்ஸ் (இனவெறி சார்ந்த சொற்களை பிரயோகித்து தன்னைத் திட்டியதாக) வைத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து இன்று நடந்த விசாரணையின் முடிவில், ஹெய்டன் மற்றும் கிளார்க் ஆகியோரின் வாக்குமூலங்களை ஏற்பதாகக் கூறி, மேட்ச் ரெ·ப்ரியான மைக் பிராக்டர், ஹர்பஜன் அடுத்த மூன்று டெஸ்ட் பந்தயங்களில் ஆடுவதற்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கினார் !

2-வது டெஸ்ட்டில் அம்பயர்கள், நமது அணிக்கு எதிராக அடித்த கூத்து போதாது என்று இப்போது இப்படி ஒரு செருப்படி !! இப்படி நேர்மையற்று பெற்ற வெற்றியை நினைத்து துளியும் வெட்கமில்லாமல், பாண்டிங்கும், கிளார்க்கும் ஒரு பேட்டியில் மிதப்பாகப் பேசியதைப் பார்த்தபோது, மிகுந்த எரிச்சலாக இருந்தது. என்ன மாதிரி ஜந்துக்கள் இந்த ஆஸ்திரேலிய அணியினர் ? வெற்றி பெறுவதற்காக எது வேண்டுமானாலும் செய்யலாமா என்ன ?

இந்த விசாரணையின்போது, களத்தில் ஹர்பஜனுடன் இருந்த சச்சினின் கூற்று மற்றும் இந்தியத் தரப்பின் வாதம் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதிலிருந்தே தெரியவில்லையா, மைக் பிராக்டர் ஒரு நிறவெறி பிடித்த ஆள் என்பது ? அதாவது, அவரது நியாயத்தின்படி, வெள்ளையர்கள் சத்தியசந்தர்கள், பிரவுன் கலர் ஆட்களான இந்தியர்கள் உண்மை பேசுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது !!! என்ன மாதிரியான மனவியாதி இந்த மேட்ச் ரெ·ப்ரிக்கு உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது :(

பிராக்டர் இப்படி பாரபட்சமாக நடந்து கொண்டதில் ஒரு பின்னணி உள்ளது. முந்தைய டெஸ்ட்டில், அம்பயர் யுவராஜை அவுட் என்று நிர்ணயித்தபோது, யுவராஜ் உடனே களத்தை விட்டு வெளியேறாமல் தனது எதிர்ப்பை தெரிவித்த செயலுக்கு, பிராக்டர் தண்டனை எதுவும் வழங்கவில்லை. அது ICC தலைவரான மேல்கம் ஸ்பீடுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனாலேயே, இந்த முறை, ஹர்பஜன் மேல் உள்ள குற்றச்சாட்டை சரியாக விசாரிக்காமல், மேல்கம் ஸ்பீடை குஷிப்படுத்துவதற்காக, ஹர்பஜனுக்கு கடுமையான தண்டனை வழங்கி விட்டார் !!!!! ஆக, ஹர்பஜன் பலிகடா ஆக்கப்பட்டு விட்டார் என்பது தான் எனது கருத்து :(

ICC ஈட்டும் அத்தனை பணமும், இந்திய துணைக்கண்டத்து மக்களுக்கு கிரிக்கெட் விளையாட்டில் உள்ள ஈடுபாட்டாலும், அவர்கள் தரும் ஆதரவாலும் வருகிறபோதே, இந்த வெள்ளையர்களுக்கு இவ்வளவு அகங்காரமும், திமிரும் இருப்பதற்கு என்ன காரணம் ?? BCCI-க்கு கொஞ்சம் சூடு, சொரணை மிச்சமிருந்தால், ஆஸ்திரலேய tour-ஐ இத்துடன் முடித்துக் கொள்வதாக அறிவித்து விட்டு, இந்திய அணியை உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்வதே சரியான முடிவாக இருக்கும்.

2 குருட்டு, ஆஸ்திரேலிய அடிவருடி அம்பயர்களும், 1 களவாணி கேப்டனும்

சிட்னியில் நடந்து முடிந்துள்ள 2வது டெஸ்ட் மேட்ச் பற்றித் தான் இப்பதிவு ! இதை எழுத ஆரம்பித்தபோது, இந்தியா டெஸ்டை டிரா செய்வதற்கு, 2 ஓவர்களும், கையில் 3 விக்கெட்டுகளும் இருந்த நிலையில், கிளார்க் வீசிய கடைசிக்கு முந்தைய ஓவரில், இந்திய அணி 5 பந்துகளில் 3 விக்கெட்டுகளையும் இழந்து ஓர் அசாதாரணமான தோல்வியைத் தழுவியது :(

டிவியில் பார்த்துக் கொண்டிருந்தே எனக்கே இத்தனை மனவருத்தம் என்றால், ஒரு போராளியைப் போல மிக்க மன உறுதியுடன், ஆஸ்திரேலிய பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு 45 ரன்கள் (112 பந்துகளில்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த நமது அணியில் கேப்டன் கும்ப்ளேயின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது! Kumble looked absolutely disconsolate after the completely unexpected defeat :(

இந்த ஆட்டத்தில், இந்தியத் தரப்பில் 11 ஆட்டக்காரர்களும், ஆஸ்திரேலியத் தரப்பில் 13 ஆட்டக்காரர்களும் விளையாடியதால் தான் நாம் தோற்றோம் என்பது குறிப்பிட வேண்டியது!!!!! ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 150+ ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்த நிலையில், (வயதானதால் ஓய்வெடுக்க வேண்டிய காலத்தில் உள்ள!) குருட்டு அம்பயர் ஸ்டீவ் பக்னர், 30 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த சைமண்ட்ஸை (அவர் அவுட் என்பதில் பக்னரைத் தவிர்த்து வேறு யாருக்குமே சந்தேகமில்லாச் சூழலில்!) அவுட் தர மறுத்து, அவருக்கு மறுவாழ்வு வழங்கியதில், சைமண்ட்ஸ் சுதாரித்துக் கொண்டு 162 ரன்கள் குவித்து, ஆஸ்திரேலியா 463 ரன்கள் எடுக்க உதவினார்!

அது போலவே, சைமண்ட்ஸ¤க்கு (அவர் எழுபதுகளில் இருந்தபோது) எதிரான stumping appeal-ஐ நிராகரித்ததோடு, அதை மூன்றாவது அம்பயரிடம் பரிந்துரைக்கவும் திமிர் பிடித்த பக்னர் ஒப்பவில்லை! அதற்கு முன் ரிக்கி பாண்டிங் கங்குலியின் பந்து வீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்தபோது, இன்னொரு கள அம்பயரான பென்சன் இந்திய அணியின் அப்பீலை நிராகரித்தார். அந்த அடிவருடி பென்சனிடம் பரிதாபமாகக் கெஞ்சிய நமது அணியினரைப் பார்க்கவே பாவமாக இருந்தது :(

இறுதி நாளான இன்று, 72 ஓவர்களில் 333 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்து ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்தது. இந்தியாவின் முதல் இன்னிங்க்ஸ் ஹீரோக்களான சச்சினும், லஷ்மணும் சோபிக்கவில்லை ! குருட்டு பக்னர் ரூபத்தில் விதி மீண்டும் விளையாடியது. நன்றாக ஆடிக் கொண்டிருந்த டிராவிட்டுக்கு அநியாய அவுட் கொடுத்தார் பக்னர், பந்துக்கும் மட்டைக்கும் ஒரு மைல் இடைவெளி இருந்தபோதும்!

அம்பயர் பென்சன், தன் பங்குக்கு, கிளார்க்கின் "தரையில் பட்டு எடுத்த" கேட்ச்சுக்கு (சக கள அம்பயரிடமும் ஆலோசனை செய்யாமல், மூன்றாவது அம்பயரிடமும் செல்லாமல்!) மிகச் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கங்குலிக்கு (51 ரன்கள்) அவுட் கொடுத்து அவரை பெவிலியனுக்கு அனுப்பியது, அக்கிரமம் ... இதில் கொடுமை (அல்லது காமெடி!) என்னவென்றால், பாண்டிங், கிளார்க் ஆகிய இருவரின் கூற்றை ஏற்று பென்சன், கங்குலியை அவுட் என்று நிர்ணயம் செய்தது தான்!

பாண்டிங் ஒரு களவாணி என்பது உலகப் பிரசித்தம், மேலும், இந்தக் காலத்தில், எந்தத் திருடன் தான் திருடியதை ஒப்புக் கொள்வான் ???? எல்லாரும் GR விஸ்வநாத் போல இருந்து விடுவார்களா என்ன ? வருங்கால கேப்டனாக வர்ணிக்கப்படும் கிளார்க், பாண்டிங் போலவே "நல்ல" நடத்தை உடையவராகத் தெரிவதால், எதிர்காலத்திலும் ஆஸ்திரேலிய அணி திருந்துவதற்கு வாய்ப்பில்லை என்பது தெளிவு !!!! ஆட்ட வர்ணனை செய்து கொண்டிருந்த கவாஸ்கர், பாண்டிங்கையும் பென்சனையும் பிடித்து விளாசி விட்டார், என்ன பயன் சொல்லுங்கள் ?

கள அம்பயர்கள், சந்தேகம் எழும்போது, நிச்சயம் தொழில்நுட்பத்தின் (3வது அம்பயர் மூலம்) உதவியை நாட வேண்டும். ஆட்டக்காரர்கள் போலவே, அம்பயர்களுக்கும் (அவர்களது) தவறுகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும். பக்னர், பென்சன் என்ற 2 கூறு கெட்ட அம்பயர்களும், ஒரு நல்ல டெஸ்ட் மேட்ச்சை பாழாக்கி, (மன உறுதியுடன் விளையாடிய) இந்திய அணி அநியாயமாக, கடைசி நிமிடத் தோல்வி அடைவதற்கு வழி வகுத்தனர் என்றால் அது மிகையில்லை :(

ரெண்டு அம்பயரும் ஆஸ்திரேலியா கிட்ட காசு வாங்கிட்டாங்களோ, என்ன இழவோ ???? அனில் கும்ப்ளேயை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது ... You simply can not and should not allow 2 incompetent idiots to spoil (in the name of umpiring) a grand show watched by millions of spectators and that is the moral of this sordid story :(

Anyway, Hats off to Kumble and the team for a great fightback !!!

மிகுந்த கடுப்புடன்
எ.அ.பாலா

Friday, January 04, 2008

407. கோயில் உண்டியலில் காசு போடுங்கள் !

கண்ணபிரான்,
உங்களின் இந்தப் பதிவு குறித்து எனது சில கருத்துகள்:

முதலில், பரபரப்பான தலைப்புக்கு பாராட்டுக்கள், தேறி விட்டீர்கள் :)

1. //திருக்கோவில்கள் திருந்த வேண்டுமா? அப்படின்னா, இனி மேல் கோவில் உண்டியலில் காசு போடாதீங்க!
//

உண்டியலில் காசு போடாதே என்று சொல்வது சரியாகாது. இருக்கிறவங்க போடட்டுமே, அதில் ஒரு பங்காவது கோயில் நற்பணிகளுக்கும், பக்தர்களுக்கும் திரும்பித் தான் வருகிறது என்பது உண்மையே! தட்டில் காசு போட வேண்டாம் என்று கூறுவதும் தவறே, ஏனெனில் பல அர்ச்சகர்கள் கஷ்ட ஜீவனம் தான் நடத்துகிறார்கள், சிலபல பெருமை வாய்ந்த கோயில்கள் தவிர்த்து !

2. அது போல, செல்வனின் பின்னூட்டக் கருத்தான அரசு நிர்வாகத்தால் தான் கோயில்களில் பிரச்சினை என்பதும் ஏற்புடையதல்ல. ஆனால், செல்வனின் பிற கருத்துகள் 'நச்' ! எனக்குத் தெரிஞ்சு, பார்த்தசாரதி கோவிலில் 'அலம்பல்' பண்றவங்க, பரம்பரையா பாத்யதை உள்ளவங்களும், கோஷ்டியில வர்றவங்களும், மடப்பள்ளி ஆட்களும் தான் !!! எல்லா விசேஷ தினங்களிலும், அவங்க ஆதிக்கம் தான் :( யாராவது விஐபி வந்தா, கோயில் ஆட்கள், அவங்க மேலே விழுந்து கவனிக்கறதும் நாம் பார்க்கிறது தானே !

ஒரு முறை RM வீரப்பன் பார்த்தசாரதி கோயிலுக்கு வந்திருந்தபோது, 20-25 பேர் தரிசனம் செய்யக்கூடிய அழகிய சிங்கர் சன்னதியில், பொது மக்கள் யாரையும் உள்ளே விடாமல் கோயில் அலுவலர்கள், அவரை மட்டும் தனியாக தரிசனம் செய்ய வைத்ததை நான் பார்த்திருக்கிறேன், அவர் அதை விரும்பாதபோதும் ! அரசியல்வாதிகளையும், சினிமாக்காரர்களையும், சாமியார்களையும் எப்படியாவது குஷிப்படுத்த வேண்டும் என்ற அதீத ஆர்வக் கோளாறு நம்மிடம் விரவியிருப்பதே இதற்கு முக்கியக் காரணம் :(

3. செல்வனின் இன்னொரு கருத்தான "ஏழைகளுக்கு உதவுவதில் ஆன்மிக உணர்வு நிரம்பியவர்கள் தான் முண்ணனியில் இருப்பார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து" என்பதில் சாரம் இருப்பதாகத் தோன்றவில்லை. இதை அனுபவபூர்வமாகச் சொல்கிறேன். இறை நம்பிக்கைக்கும், மனித நேயத்திற்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை !!!

4. எல்லா இடத்துலேயேயும், 'வகுப்புகள்' இருக்கிற மாதிரி, கோயில் தரிசன முறையிலும் இருக்கு, அதை 'avoid' பண்ண முடியாது, மாத்தறதும் ரொம்ப கஷ்டம். ஸ்பெஷல் டிக்கட் விலையை நல்லா உயர்த்தி வச்சு, இருக்கிறவங்க கிட்டேயிருந்து வாங்கறது ஒரு தப்புமில்ல, அரசியல் விஐபிகள் தான், ஒரு பைசா செலவில்லாம, அதிகாரத்த வச்சு, பண்ண பாவத்துக்கு ஓசியிலேயே கோயிலில் பரிகாரம் தேடறவங்க என்பதும் நிதர்சனமே !!! தொழிலதிபர் விஐபிக்கள் வாயிலாக கோயிலுக்கு பொருள் ஆதாயம் உள்ளதால், அவர்களுக்கு ஸ்பெஷல் தரிசனம் அனுமதிக்கப்படுவதில் தவறில்லை.

5. //கூட்டமாக இருக்கு! டைம் ஆகும்! ரொம்ப பிசி என்று நினைக்கிறீர்களா?
அப்படின்னா கோயிலுக்குப் போகவே வேண்டாம்!
காலத்தைக் கடந்தவனைக் காணக் கூட உங்களுக்குக் காலம் இல்லை எனில், அப்படி ஏன் போக வேண்டும்? இல்லத்தில் இருந்தே, குடும்பமாக வழிபடலாமே?
//

இதெல்லாம், கேட்கறதுக்கு வேணா நல்லா இருக்கும், கடைபிடிக்கறது ரொம்ப கஷ்டம் ! "எங்கும் இறைவனைக் காண்பதற்கு" நாமெல்லாம் ஆழ்வார்/நாயன்மாரா என்ன ???

6. //* ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருணகிரியும் எத்தனை சல்லிக்காசு உண்டியலில் போட்டார்கள்?
** பணம் போடுவதால் பாவங்கள் கரைவதில்லை!
*** இறைவனைப் பணம் கொண்டு வசியப்படுத்த முடியவே முடியாது!!!
//

ஆழ்வார்/ நாயன்மாரிடம் காசு இருக்கவில்லை என்பது தான் நிஜம் ! அது போலவே, பெரும்பாலான மக்கள் காசு போடுவதால், பாப விமோசனம் கிட்டாது என்பதையும் உணர்ந்தே இருக்கிறார்கள் என்பது என் தாழ்மையான எண்ணம். சாதாரண மக்கள், மன அமைதிக்காகவும், ரொம்பவும் கஷ்டமில்லாத ஜீவனத்தை வேண்டியுமே, இறைவன் இல்லத்திற்குச் செல்கிறார்கள்.

7. //முடிந்த வரை புதுப்புது ஆலய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
இருக்கும் பல கோயில்களை நல்ல முறையில் பராமரிக்க உதவுங்கள்!
//

புதுசா ஆலயங்கள் வேண்டாம்னு நீங்க சொல்ற கருத்தோட எனக்கு உடன்பாடே, இருக்கிற கோயிலகளில் பல பராமரிப்பு அற்று, சிதிலமான நிலையில், நித்ய ஆராதனைக்குக் கூட காசு இல்லாமல் உள்ளன என்பது கண்கூடு. எனக்குத் தெரிஞ்சு, ஒரு 35 பழமையான வைணவ திவ்ய தேசங்கள் கவனிப்பார் அற்று, மோசமான நிலையில் உள்ளன. அவைகளில் சில:
திருமெய்யம் சத்யமூர்த்திப் பெருமாள் கோயில்
திருக்கூடலூர்
திருக்கபிஸ்தலம்
திருஆதனூர்
புல்லம்பூதங்குடி
நாதன் கோயில்
திருக்கண்டியூர்'
திருக்கண்ணங்குடி
தலைச்சங்காடு, கேரளா
திருநாங்கூர் கோயில்கள் (11)
திருக்குரயலூர் (திருமங்கையாழ்வார் அவதாரத் தலம்)
திருவாலி & திருநகரி

அது போலவே, கோயிலுக்குப் போடும் பணத்தை, தர்ம காரியங்களுக்கு செலவிடலாம். இறைத் தொண்டை விட அடியவர் தொண்டு சிறந்தது அல்லவா ?

8. உங்கள் தமிழ் அர்ச்சனை குறித்த கருத்து பற்றி ஏதாவது சொன்னால் அரசியலாகி விடும் ;-) இறைவனுக்கு மொழி கிடையாது. அவரவர்க்கு எது விருப்பமோ, அதன்படி அவனைப் போற்றி வழிபடலாம், அம்புடுதேன் :)

9. தங்களது இன்னபிற நல்ல கருத்துக்களோடு முழுதும் உடன்படுகிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா

Thursday, January 03, 2008

எளிமையான மேலாண்மைப் பாடங்கள் - 1

ஓர் இனிமையான காலைப்பொழுதில், சிங்கம் ஒன்று தனது குகைக்கு வெளியே இளைப்பாறிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த நரி ஒன்று, "எனது கைக்கடிகாரம் ரிப்பேராகி விட்டது, மணி என்ன?" என்று கேட்டது. அதற்கு சிங்கம், "நான் அதை பழுது பார்த்துத் தருகிறேன்" என்றவுடன், நரி ஆச்சரியமடைந்து, "உனது கூரிய நகங்கள் எனது கடிகாரத்தை இன்னும் சேதப்படுத்தி விடுமேயன்றி, உன்னால் அதை ரிப்பேர் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை! மேலும் நீ ஒரு சோம்பேறி என்பது அனைவரும் அறிந்த ஒன்றே!" என்றது.

சிங்கம் நரியை வற்புறுத்தி அந்த கடிகாரத்தை வாங்கிக் கொண்டு தனது குகைக்குள் சென்று, சிறிது நேரத்தில் ரிப்பேர் செய்யப்பட்ட கடிகாரத்துடன் வெளி வந்து நரியிடம் கொடுக்க, நரிக்கு சிங்கத்திடம் மதிப்பு ஏற்பட்டு விட்டது.  சிங்கம் தனது இளைப்பாறுதலைத் தொடர்ந்தது.

சிறிது நேரத்தில், ஒரு ஓநாய் அவ்வழி வந்தது. "என் டிவி பழுதாகி விட்டது. இன்று மாலை உன் குகைக்கு வந்து நான் டிவி பார்க்க அனுமதிப்பாயா?" என்று ஓநாய் சிங்கத்திடம் கேட்டது. சிங்கம்,"உன் டிவியை நான் ரிப்பேர் செய்து தருகிறேன், எடுத்து வா" என்றவுடன், ஓநாய், "உன்னைப் போல் கூரிய நகங்கள் கொண்ட ஒரு சோம்பேறிச் சிங்கம் எனது புது மாடல் டிவியை பழுது பார்க்க முடியவே முடியாது. என்ன விளையாடுகிறாயா?" என்று கூறியது.

முன்போலவே வற்புறுத்தி, ஓநாயிடமிருந்து ரிப்பேரான டிவியை வாங்கிக் கொண்டு தனது குகைக்குள் சென்ற சிங்கம், சிறிது நேரத்தில், துல்லியமாக வேலை செய்யும் டிவியுடன் வெளி வந்து, அதை ஓநாயிடம் தந்தது. ஓநாய்க்கோ மகிழ்ச்சியோடு, பயங்கர ஆச்சரியம்!

குகைக்குள் ஒரு காட்சி:

ஒரு மூலையில் பத்து-பன்னிரெண்டு சிறிய புத்திசாலி முயல்கள் கடினமான, சிக்கலான இயந்திரப் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருக்க, இன்னொரு மூலையில், திருப்தியுடனும், மகிழ்ச்சியுடனும் சிங்கமானது இளைப்பாறிக் கொண்டிருந்தது.

கதையின் நீதி:

ஒரு மேலாளர் ஏன் பிரசித்தி பெற்று விளங்குகிறார் என்பதை புரிந்து கொள்வதற்கு, அன்னாருக்குக் கீழே பணி புரியும் ஆட்களின் வேலைத் திறனை உற்று நோக்குங்கள் :)

இதிலிருந்து நமக்குக் கிட்டும் மேலாண்மைப் பாடம்:

தகுதியே இல்லாத ஒருவருக்கு எப்படி பணியேற்றம் (promotion) கிடைக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கு, அன்னாருக்குக் கீழே பணி புரியும் ஆட்களின் வேலைத் திறனை உற்று நோக்குங்கள் :)

என்ன மக்களே, நல்லா இருந்துச்சா ???? :))))

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails